விவசாயிகளின் விடி வெள்ளி- பாரம்பரியக் கால்நடைகள் !
சமீபத்தில் பத்திரிகையில் ஒரு செய்தி வெளி வந்தது. அது என்னவென்றால் தமிழ்நாட்டில் நாமக்கல் சந்தையிலிருந்து வாங்கி கேரளாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டுக் கொண்டிருந்த 144 மாடுகளை வன விலங்குத் துறை அதிகாரிகள் மீட்டு கோவையில் இயங்கும் ஒரு கோசாலையில் ஒப்படைத்தனர் என்பதும். அதைத் தொடர்ந்து மாட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதுமே அது.
இதுவரை விஷயத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தமிழக மாட்டு வியாபாரிகளுக்கு ஆதரவாகக் கேரள வியாபாரிகளும் போராட்டத்தில் குதிதுள்ளனர் என்ற செய்திதான் வியப்பை அளிக்கிறது. .
பொதுவாக நம் நாட்டில் ஒரு மாநிலத்தில் போராட்டம் என்றால் அடுத்த மாநிலத்தில் அதைப் பற்றிக் கண்டு கொள்ள மாட்டார்கள். சொல்லப்போனால் தண்ணீர் பிரச்னை, எல்லைப் பிரச்னை போன்ற பல விஷயங்ககள் குறித்து ஒரு மாநிலத்துக்கு எதிராக இன்னொரு மாநிலத்தில் போராட்டம் நடத்துவது போன்றவைகளை நாம் பார்க்கிறோம்.
இவ்வாறு இருக்கும் போது கேரள மாட்டு வியாபாரிகள் தமிழக வியாபாரிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் இதன் பின்னணி இதுதான்:
கேரளாவில்தான் மிக அதிகமாக மாட்டிறைச்சி ;உட்கொள்ளபடுகிறது; விற்கப்படுகிறது.. அதற்காக ஏராளமான மாடுகள் மகாராஷ்டிரா, ஆந்திரா , ஒடிசா போன்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வழியாகக் கேரளத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன; தமிழ் நாட்டிலிருந்தும் ஏராளமான மாடுகள் அவ்வாறு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த மாடுகள் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றன. சில பசுப் பாதுகாப்பு இயக்கத்தினர் அவ்வப்போது மாடுகளைக் கொண்டுபோகும் லாரிகளை மறித்து அவைகளைக் காவல் துறையினரிடம் ஒப்படைப்பதும் நடந்து கொண்டிருக்கிறது.
கோசாலைகளில் பராமரிக்கப்படும் ஒவ்வொரு பசுவுக்கும் தீவனம் மற்றும் பராமரிப்புக்காக 40 ரூபாயை மத்திய அரசு அளிக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாடுகளைத் தத்தெடுத்து அவற்றின் பராமரிப்புக்காக நிதியுதவி அளிக்கும் திட்டத்தையும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
ஆவினங்களை நமது சமூகம் பெரும் செல்வமாகவும் , பசுவைத் தாயாகவும் கருதி வந்துள்ளது.
இது வெறுமனே உணர்வு பூர்வமானது அல்ல, பொருளாதாரமும் இதில் அடங்கியுள்ளது.
ஒரு மேலை நாட்டு விஞ்ஞானி சமீபத்தில் நடத்திய ஆய்வின் முடிவில் கூறியது என்னவெனில் ' இந்தியாவின் பாரம்பரியப் பசு இனங்கள் மட்டுமே உண்மையான பசுக்களாகும் ; மற்றவை எல்லாம் பசுக்களைப் போல் தோற்றமளிக்கும் விலங்குகளே' . இது நமக்குப் பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது.
மேலும் ஒரு அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால் நமது ஆநிரைகளின் மேன்மையைப் புரிந்து கொண்ட சில நாடுகள் பெருமளவில் நமது பாரம்பரியக் கால்நடை இனங்களை மிக அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். நாமோ அவைகளின் பெருமைகளைப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.
பணத்துக்கு ஆசைப்பட்டு நம்மவர்களும் விற்கின்றனர். இதில் பிரேசில் நாடு முதன்மை வகிக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.
இதில் வேதனை தரும் வேடிக்கை என்னவெனில் அவர்கள் நடத்தும் விந்து வங்கிகளிலிருந்து நமது ஆவினங்களின் விந்து மாதிரிகளைப் பல மடங்கு அதிக விலை கொடுத்து நாம் வாங்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
இத்துறையில் வல்லுனரான ஒருவர் கூறும்போது' பசுமாட்டின் சாணம், கோமியம் இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் என்பது மிகச் சிறந்த ஔஷதம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. புற்று நோய்க்குக் கூட இது அருமருந்தாக உள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் பஞ்சகவ்யத்தின் விலை மிக அதிகமாக உள்ளது. எதிர்காலத்தில் இது இன்னும் அதிகரிக்கக் கூடும்; நமது விவசாயிகளின் ஏழ்மை, கிராமப் பொருளாதாரம் இவற்றுக்கு இது அளிக்கும் வாய்ப்புகள் எவ்வளவு என்பது கூறாமல் விளங்கும் . பஞ்சகவ்யம் தயாரித்து விற்பனை செய்தால் நமது ஏழை விவசாயிகள் பெரும் செல்வந்தர்களாகலாம்' .
யோகா, வேம்பு, மஞ்சள் போன்றவைகளில் காப்புரிமை கொண்டாடி நம் கண்ணில் மிளகாய்ப் போடி தூவும் மேலை நாடுகள் நமது பாரம்பரியக் கால்நடைச் செல்வத்தின் விஷயத்திலும் அதே போன்று செய்ய
விடுவோமா அல்லது விழித்துக் கொண்டு ஆவன செய்வோமா?
இரா.ஸ்ரீதரன்
-தமிழக பா ஜ க வின் 'ஒரே நாடு' ( மாதமிருமுறை) செப் 1- 15, 2015 இதழில் வெளி வந்தது
No comments:
Post a Comment