இறைவனின் அம்சமாகக் கருதப்படும் ஒரு பொருளே பல சமயங்களில் இறைவனை நினைவுபடுத்தப் போதுமானதாயிருக்கும். வேல் எப்படி முருகனின் அம்சமாகக் கருதப் படுகிறதோ, திரிசூலம் எப்படி சிவனின் அம்சமாகக் கருதப்படுகிறதோ அப்படியே சாளக்கிராமமும் திருமாலின் அம்சங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
சாளக்கிராமங்கள் இயற்கையாகத் தோன்று பவை. சாளக்கிராமக் கற்கள் நேபாள நாட்டில் ஓடும் கண்டகி நதியில் கிடைக்கின்றன. சாளக் கிராம மலையிலிருந்து கண்டகி நதி ஓடிவரும் பகுதியில் சாளக்கிராமம் என்னும் கிராமத்தில் இக்கற்கள் கிடைக்கின்றன.
சாளக்கிராமம் கூழாங்கல் போன்ற ஒரு கல் வகையைச் சார்ந்தது என்றும், ஒருவகைப் பூச்சியின் மேல்ஓடு கெட்டிப்பட்டு உருவானவை என்றும் வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
சாளக்கிராமக் கற்களில் சங்கு, சக்கரம், அம்பு, வில், கலப்பை, வனமாலை, கோடுகள், புள்ளிகள் போன்ற பல சின்னங்கள் காணப்படுகின்றன. விஷ்ணு பகவானின் சின்னங்கள் இக்கற்களில் காணப்படுவதால், அவை விஷ்ணு பகவானின் அம்சமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வழிபாட்டில் முக்கிய இடம்பெறுகின்றன. சாளக்கிராமங் களில் லட்சுமிதேவியுடன்கூடிய மகாவிஷ்ணு உறைந்திருக்கிறார் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அருட்செல்வம், பொருட்செல்வம் வேண்டி தெய்வாம்சம் பொருந்திய இக்கற்களை வழிபடுகிறார்கள்.
சாளக்கிராமக் கற்கள் திருமாலின் அம்சம் என்பதை புராணத்தின்மூலமும் அறியமுடிகிறது. விதேஹ தேசத்தில் பிரியம்வதை என்ற பெண், திருமாலே தனக்கு மகனாகப் பிறக்கவேண்டுமென்று தவம் மேற்கொண்டாள். அவளது தவத்திற்கு இரங்கிய பகவான், "அடுத்த பிறவியில் நீ கண்டகி நதியாக உருவெடுப்பாய். அந்நதியில் நான் சாளக்கிராமக் கற்களாகத் தோன்றுவேன்' என்று வரமருளினார். இந்த வரலாற்றின் அடிப்படையில் சாளக்கிராமங்கள் திருமாலின் திருச்சின்னமாகக் கருதப்படுகின்றன.
சாளக்கிராமங்கள் பல வண்ணங்களும், பல வடிவங்களும்கொண்டு விளங்குகின்றன. அவற்றின் வடிவம், அவற்றில் காணப்படும் சின்னங்கள் ஆகியவற்றைக்கொண்டு அவை எந்த தெய்வ வடிவைச் சார்ந்தது என அறியப்படுகின்றன. இந்த அடிப்படையில் வராகமூர்த்தம், லட்சுமி நரசிம்ம மூர்த்தம், வாமன மூர்த்தம், பரசுராம மூர்த்தம், பலராம மூர்த்தம், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தம், கிருஷ்ண மூர்த்தம், சந்தான கோபால மூர்த்தம் என அவை வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றுள் சந்நியாசிகளும் பிரம்மச்சாரி களும் வழிபடுவதற்கேற்றது நரசிம்ம மூர்த்தம் எனப் படுகிறது. குழந்தைப்பேறு வேண்டுவோர் சந்தான கோபால மூர்த்தத்தை வழிபடலாம்.
சாளக்கிராமத்தை நேரிடையாக கற்களாகவோ, சிலைகளாகச் செய்தோ வழிபட லாம். கற்களாகவே வழிபடும்போது அவற்றின் புனிதத்தன்மை மாறாமலும் குறையாமலும் இருக்கும். வழிபடவும் மிகவும் எளிமையானதாக இருக்கும் என்பதால், பலர் தங்கள் வீடுகளில் இந்த கற்களை பூஜையறையில் வைத்து, அதற்குரிய முறையில் அபிஷேக, ஆராதனைகள் செய்வார்கள்.
இமயமலையில் பத்ரிநாத் ஆலயத்திலுள்ள விஷ்ணு சிலையும், உடுப்பியிலுள்ள கிருஷ்ணர் சிலையும் சாளக்கிராமக் கற்களால் செய்யப்பட்டவை.
வீடுகளில் சாளக்கிராமக் கற்களை வைத்திருப்பவர்கள் அவற்றை உரிய முறையில் பாதுகாத்து வைத்திருப்பார்கள். சங்கு, துளசி போன்றவற்றை அவற்றுக்கு அருகில் வைத்திருப்பதால் அவற்றின் புனிதத்தன்மை பாதுகாக்கப்படுகிறது. இவை வைக்கப்பட்டுள்ள இடத்தைச் சுற்றிலும் தெய்வீக அலைகள் பரவுவதால் தீயசக்திகள் உள்ளே நுழையாது.
சிவபெருமானைக் குறிக்கும் வெள்ளைநிறக் கற்களையும் சாளக்கிராமங்களோடு வைத்து வணங்கலாம். வெள்ளைநிறக் கற்கள் துவாரகை யில் கிடைக்கும்.
சாளக்கிராமம், துளசி இரண்டையும் ஒன்றாக வைத்து வழிபடுவது சிறந்த பலனைத் தரும். சாளக்கிராமத்தின்மீது வைக்கப்பட்டிருக் கும் துளசியை எடுப்பதற்குரிய முறை ஒன்றும் நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது. சாளக்கிராமங்களின்மீது வைக்கப்பட்டி ருக்கும் துளசியை எடுக்கவேண்டுமானால் மற்றொரு துளசியை வைத்துவிட்டுதான் முதலில் வைத்த துளசியை எடுக்கவேண்டும்.
இந்தக் கற்களை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வைத்து வழிபடக்கூடாது. இரட்டைப்படை எண்ணிக்கையில் வைத்து தான் வழிபடவேண்டும்.
சாளக்கிராமங்களை விலைகொடுத்து வாங்குவதைவிட, வயதில் மூத்தவர்கள் மற்றும் துறவிகள் போன்றவர்களிடமிருந்து அவர் களுடைய ஆசிகளுடன் பெற்று அவற்றை வழிபடுவதே நன்மையளிப்பதாக இருக்கும்.
சாளக்கிராமத்தை அதன் எடைக்குச் சமமான பால் அல்லது அரிசியில் வைத்து எடையைக் காணும்போது அதன் எடை மாறாமலிருந்தால் அது மகிமைவாய்ந்தது என்று கூறியுள்ளனர். அதனால் சிறப்பு வகை சாளக்கிராமங்களைக் கண்டறிந்து அவற்றை வழிபடுவதே சிறந்த பலனை அளிக்கும்.
தனக்காக மட்டுமல்லாமல், மற்றவர்கள் தங்கள் குறைகள் நீங்கி நன்மை பெறவேண்டும் என்பதற்காகவும் சாளக்கிராமங்களை வழிபடலாம்.
சாளக்கிராம வழிபாடு- புண்ணிய தலங்களனைத்திலும் நீராடிய பலன், அனைத்து வகை யாகங்களைச் செய்த பலன், விரதம், தவம், நாம பாராயணம் ஆகியவற்றால் கிடைக்கும் பலனனைத்தையும் கொடுக்கவல்லது.
சாளக்கிராமத்தை அபிஷேகம் செய்த தீர்த்தத்தை அருந்துவது தெய்வ அனுக்ரகத்தைப் பெற்றுத் தரும். நம் பாவங்கள் அனைத்தும் நீங்குவதோடு, நம் மூதாதையர்களுக்கும் முக்தியைக் கொடுக்கும்.
"சாளக்கிராம பூஜை செய்பவன் பொய் சொல்வானேயானால் அவன் நிரந்தர நரகத்தை அடைவான்' என ஞான நூல்கள் கூறுகின்றன.
விஷ்ணு ஆலயங்களிலும், புனித மடாலயங் களிலும் வழிபாட்டில் மகிமை வாய்ந்த சாளக் கிராமங்கள் வைக்கப்பட்டிருக்கும். அவற்றைத் தரிசித்து நற்பலன்களைப் பெறலாம்.
No comments:
Post a Comment